Labels

நொய்யல் கண்ணீர் (26) எப்போது தீரும் சோகம்? (18) Awareness Talks (12) Village Visit-2013 (9) coimbatore nature (9) நொய்யல் என ஒரு நதி (8) BioDiversity (7) Coimbatore Lakes Condition-2011 (7) About Me (6) coimbatore birds (6) கவிதை தட்டுபாடு (5) Birds for Sale (4) Kovai Birds (4) Kovai Issues on Trees (4) My Coimbatore (4) save nature (4) Bird Watching-2013 (3) Umesh in Media (3) என் வீட்டில் குருவிகளும் வாழும் (3) கோயம்புத்தூர் மாவட்ட பறவை இனங்கள் (3) கோவை தியாகிகள் :உள் உணர்வுகள் (3) Bannari Amman Institution (2) Bird Watching-2012 (2) Kurichi Lake/Wetland (2) Lokpal issues (2) Osai Enviro Meet (2) PSG கல்வி நிறுவன மாணவர்களுடன் கோவை குளங்களை பற்றி(08-08-2012) (2) Save our Tigers (2) Something to Feed (2) இனி அழிந்து (2) கல்லூரியில் ஆயிரம் நாட்கள் (2) திருக்குறள் (2) யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு (2) லண்டனா கேமெரா உண்ணிச் செடி (2) +2 தேர்வு அட்டவணை 2012 (1) Coimbatore Bird Race (1) Driving Rules (1) Heritage of Kovai (1) Honour's by Officials (1) King Cobra Rescue Operation - December 2011 (1) NSS Camp of TNAU-May-2012 (1) Plastic Free Vellingiris-2012 (1) Silent valley Guide (1) Tree Protection Committee meet (1) human elephant Conflict (1) noyyal river (1) vote for i.v(2011) (1) அனைவருக்கும் கல்வி அவசியம் (1) உலக தண்ணீர் தினம்-2012 (1) எங்கும் தமிழ் (1) எதிலும் தமிழ் (1) என் வீட்டில் ரோஜா வனம் (1) எப்போது தீரும் வால்பாறை சோகம்? (1) கொள்ளைப்பாதை (1) சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு(06-07-2012) (1) சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி (1) பிளாஸ்டிக் அரக்கனை கொல்ல முடியாது (1) மண்ணுக்கு உரமானாவர் (1) மனம் கவர் மதுரை (1) மரக்கன்றுகள் நடப்பட்டது (1) மறையும் மதுரை (1)

Friday 17 February 2012

எப்போது தீரும் வால்பாறை சோகம்?

copyrights @ umeshmarudhu-2012


எப்போது தீரும் வால்பாறை சோகம்?
கட்டுரையாளர்: "ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர்.
க. காளிதாசன்


சமீபத்தில் வால்பாறையில் மீண்டும் ஒரு குழந்தை சிறுத்தையால் தாக்கப்பட்டு உயிரிழந்தது. கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து சிறுத்தைகளால் தாக்கப்பட்டு 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. தேயிலைத் தோட்டங்களில் பனியிலும், மழையிலும் உழைத்துச் சொற்ப ஊதியத்தில் வாழ்க்கையை ஓட்டும் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் அவை. குழந்தைகளை இழந்த அந்த ஏழைப் பெற்றோர்களின் வலி சாதாரணமானதல்ல.
மருத்துவமனையிலிருந்து குழந்தையின் உடலை எடுத்துச் செல்லாமல் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் கூடிப் போராட்டம் நடத்தினர். ஊழியர்களைச் சிறைப்பிடித்தனர். சிலர் அவர்களைத் தாக்கவும் முற்பட்டனர். "புலிகள் காப்பகம் என்று அறிவித்ததைத் திரும்பப் பெறவேண்டும்', "வால்பாறையை விட்டு வனத்துறை வெளியேற வேண்டும்', "விலங்குகளைக் கொல்வதற்கு உரிமை வேண்டும்' போன்ற முழக்கங்களை எழுப்பினர். அவர்களைச் சமாதானப்படுத்த வந்த சார்-ஆட்சியரிடம் தங்கள் கோபத்தைக் கொட்டினர். அவர்களின் கோபம் மிக நியாயமானது, ஆனால், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறினால் இப்பிரச்னை தீர்ந்து விடுமா?
இந்தியக் காடுகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கையைப் பற்றிய உண்மை நிலை அறிய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு அளித்த அறிக்கையில் காணப்பட்ட மகிழ்ச்சியான செய்தி, தமிழகக் காடுகளில் புலிகளின் எண்ணிக்கை சற்றே உயர்ந்திருக்கிறது என்பதுதான். அதன் விளைவாக ஆனைமலை, முதுமலை ஆகிய வனவிலங்கு சரணாலயங்கள் புலிகள் காப்பகங்களாக அறிவிக்கப்பட்டன.
அதற்கு முன்பாக களக்காடு-முண்டந்துறை பகுதி மட்டுமே புலிகள் காப்பகமாக இருந்தது. இது நமது மாநில வனப்பாதுகாப்புக்குக் கிடைத்த வெற்றியாகும். இயற்கை ஆர்வலர்கள் இதை மகிழ்ச்சியோடு பேசத் தொடங்கியபோது அப்பகுதி மக்களிடம் இதற்கு எதிரான கருத்து பரவத் தொடங்கியது. அதுவும் குறிப்பாக, வால்பாறையில் சிறுத்தைகளால் குழந்தைகள் மரணமடையும்போதெல்லாம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதாலேயே இச்சம்பவங்கள் நிகழ்கின்றன என்றும் புலிகள் காப்பகத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன. மக்களிடம் பரப்பப்பட்ட சில தவறான தகவல்களே அதற்குக் காரணம்.
உண்மையில் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதால் ஒதுக்கப்படும் பெரும் நிதி அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுவதற்கே செலவிடப்பட உள்ளது.
புலிகளைப் போன்றே சிறுத்தைகளும் காட்டில் தமக்கென எல்லை வகுத்துக்கொண்டு தனித்து வாழ்பவை. இணை சேருகிற காலம் தவிர, அவை தம் எல்லைக்குள் வேறு சிறுத்தையை அனுமதிக்காது. தாயிடமிருந்து பிரியும் ஒவ்வோர் இளம் சிறுத்தையும் தமக்கான புதிய வாழ்விடத்தை அமைத்தாக வேண்டும். அவற்றில் சில மனிதக் குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள காடுகளைத் தமது வாழ்விடமாக்கிக் கொள்கின்றன.
புலிகளைப் போன்று, பெரிய விலங்குகளை மட்டுமே உணவாக்கி சிறுத்தைகள் வாழ்வதில்லை. எல்லா சூழ்நிலையிலும் வாழும் தகவமைப்பு பெற்றவை. முயல், மந்தி, சருகுமான், முள்ளம்பன்றி போன்ற சிறு விலங்குகள் இருந்தாலே சிறுத்தைகள் பிழைத்துக்கொள்ளும். தேயிலைத் தோட்டங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் இச்சிறுவிலங்குகள் இருப்பதால் சிறுத்தைகளின் நடமாட்டம் அங்கு இருந்து கொண்டேயிருக்கும். அங்குள்ள சிறுத்தைகளைக் கவரும் மற்றொன்று வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள். சில நேரங்களில் நாய்களைத் தேடி அவை மனிதக் குடியிருப்புகளுக்கு வருகின்றன. கசாப்புகடைகளில் தூக்கி எறியப்படும் எஞ்சிய மாமிசக் கழிவுகளும் சிறுத்தைகளைக் கவர்ந்திழுப்பவை.
ஆனால், குழந்தைகள் கொல்லப்பட காரணம் என்ன? ஆய்வாளர்கள் இதை பல கோணங்களில் பார்க்கிறார்கள், குழந்தைகளைக் கொன்ற சிறுத்தைகளை மனித மாமிசம் உண்பவை என்று வரையறுக்க முடியாது. ஏனெனில், இச்சம்பவங்களில் குழந்தைகள் தாக்கப்பட்டு இறந்துள்ளனவே ஒழிய, சிறுத்தைகளால் உண்ணப்படவில்லை.
மேலும், மனிதர்களை உண்பவை எனில், அவை மனிதச் சுவைக்கு ஆட்பட்டு தொடர்ந்து மனிதர்களையே குறிவைத்துத் தாக்கும். அப்படி தொடர் சம்பவமாக இங்கு நிகழவில்லை.
தமது இரை விலங்குகளுக்கான பற்றாக்குறை இருப்பதால் அவை தாக்குகின்றன என்பதையும் ஆய்வுகள் மறுக்கின்றன. சமீபத்தில் அங்குள்ள இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தால் சிறுத்தைகளின் கழிவுகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் முயல், முள்ளம்பன்றி, சருகுமான், கேளையாடு, கருமந்தி, கடமான் போன்றவையே அவற்றின் உணவாக இருப்பதை அறிந்துள்ளனர். இவ்விலங்குகள் அங்கு கணிசமாக காணப்படுகின்றன.
புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதால் இச்சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பதும் தவறானதே. 2007-ல் தான் ஆனைமலை புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டது. ஆனால், 1990-லிருந்து 2007-வரை 10 பேர் மரணமடைந்துள்ளனர்.
இங்கு நடந்த சோக நிகழ்வுகள் அனைத்தும் வெளிச்சம் குறைந்த மாலைப்பொழுதிலேயே நடந்துள்ளன என்பது இச்சம்பவங்களில் காணப்படும் பொதுவான அம்சமாகும். இவற்றில் பெரும்பாலும் குழந்தைகள் குனிந்த நிலையில் ஏதாவது செயலில் இருக்கும்போதே தாக்கப்பட்டுள்ளன. தனது இரை விலங்காகக் கருதியே குழந்தைகளைச் சிறுத்தைகள் தாக்கியிருக்கலாம் என்ற கருத்தும் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
ஒவ்வொரு சம்பவம் நிகழ்ந்தபோதும் கூண்டு வைத்து சிறுத்தைகளைப் பிடிக்கும் முயற்சி நடைபெறுகிறது. பிடிபடும் சிறுத்தைகள் வேறு காடுகளில் விடப்படுகின்றன.
சமீபத்தில் அக் குழந்தை கொல்லப்படுவதற்கு முந்தைய நாள்தான் ஒரு சிறுத்தை கூண்டில் பிடிபட்டு வேறு காட்டில் விடப்பட்டது. இப்படி பிடிப்பதால் இப்பிரச்னை தீராது என்பதை மகாராஷ்டிரத்தில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
ஏனெனில், ஒரு சிறுத்தை அகற்றப்படும்போது அந்த இடத்தைத் தமதாக்கிக்கொண்டு அருகிலுள்ள காடுகளிலிருந்து வேறு சிறுத்தை அங்கு வந்துவிடும். எனவே சிறுத்தைகளே இங்கு இருக்கக் கூடாது என்பது நடைமுறை சாத்தியமற்றது.
ஆனால், நிகழ்வுகளைத் தவிர்க்க நாம் வேறு நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும். இச்சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதில் தேயிலைத்தோட்ட நிர்வாகத்துக்கும் முக்கிய பங்குண்டு. சிறுத்தைகளால் தாக்கப்பட்ட பெரும்பாலான சம்பவங்கள் பிரதான சாலையிலிருந்து குடியிருப்புப் பகுதிக்கு போகும் குறுகிய வழித்தடங்களிலேயே நடைபெற்றுள்ளன. எனவே, குடியிருப்புகளுக்குப் போகும் பாதைகள் அகலமானதாகவும் இரவு நேரங்களில் மின் விளக்கின் வெளிச்சம் நிறைந்ததாகவும் மாற்றப்பட வேண்டும்.
குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள புதர்கள் சிறுத்தைகள் பதுங்க வழிவகுக்கும். புதர்களை முற்றிலும் அழிக்க வேண்டும். எல்லா வீடுகளுக்கும் கழிவறைகள் அவசியமாகும். வீடுகளைச் சுற்றி போதிய தெரு விளக்குகள் அமைக்கப்பட வேண்டும். பேருந்து வசதியற்ற பகுதிகளுக்கு அவ்வசதி செய்து தரப்பட வேண்டும் அல்லது ஒருங்கிணைந்த குடியிருப்பு வளாகங்களை வேறு இடத்தில் அமைத்துத் தரவேண்டும். வீடுகளில் நாய்கள் வளர்ப்பதைத் தவிர்ப்பதே நல்லது. சிறுத்தைகளைக் கவரும் மாமிசக் கடைகளின் கழிவுகள் முறையாகப் புதைக்கப்பட வேண்டும். குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். அங்குள்ள மருத்துவமனைகளிலும் கழிவுகள் முறையாக மேலாண்மை செய்யப்பட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக வெளிச்சம் மங்கிய மாலைப் பொழுதுகளிலும் இரவிலும் நடக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடனே செல்ல வேண்டும். குறிப்பாக, குழந்தைகளைத் தனித்து நடக்க விடக்கூடாது. இதே ஆனைமலையில் டாப்சிலிப் போன்ற பகுதிகளில் அடர்ந்த காட்டின் நடுவே பழங்குடிமக்கள் வாழ்கின்றனர். அங்கும் குழந்தைகள் உண்டு. ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதில்லை. ஏனெனில், அம்மக்களிடம் உள்ள வனவிலங்குகளைப் பற்றிய எச்சரிக்கை உணர்வே காரணமாகும்.
வால்பாறை பகுதிகளில் உள்ள சிறுத்தைகளின் எண்ணிக்கையைத் துல்லியமாக அறிய தானியங்கி கேமராக்கள் பொருத்தி கணக்கெடுப்பு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் அச்சம் தவிர்க்க கூண்டுவைத்து பிடிக்கப்படும் சிறுத்தைகளை வேறு பகுதிகளில் விடும்போது அவற்றின் நடமாட்டத்தை அறியும் நவீன சாதனங்களைப் பொருத்திய பின்பே விட வேண்டும்.
வனவிலங்குகளால் மனிதர்கள் தாக்கப்படும்போது கூடும் மக்களிடம் சிக்கித் தவிப்பது அங்குள்ள வனத்துறையே. பாதிக்கப்பட்ட மக்களின் கோபம் வனத்துறைக்கு எதிராக திரும்புகிறது. உயர் அதிகாரிகளைக் காட்டிலும் களப் பணியாளர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். யாரும் விலங்குகளின் தாக்குதலை நியாயப்படுத்துவதில்லை. ஆனால், வனத்துறையால் மட்டுமே எல்லாமும் செய்துவிட முடியாது.
வனப்பாதுகாப்பு, குடியிருப்பு பகுதிக்கு வரும் யானைகளை விரட்டுதல், வேட்டைத்தடுப்பு, தீ தடுப்பு போன்றவற்றில் இரவு பகலாகப் பணியாற்றும் களப் பணியாளர்களைக் குறிப்பாக மிகச் சொற்ப ஊதியத்தில் தாற்காலிகப் பணியிலிருக்கும் வேட்டைத் தடுப்புக் காவலர்களை இதில் குறை கூறுவதோ குற்றம் சாட்டுவதோ பொருத்தமாகாது. இது அவர்களை மீறிய சம்பவங்களாகும். காட்டு விலங்குகள் இல்லாமல் காடு இருக்க முடியாது. காடு இல்லாத நாடு செழிக்க வாய்ப்பில்லை. ஆனைமலை போன்ற அரிய வனப்பகுதிகள் இயற்கை நமக்களித்துள்ள விலைமதிக்க முடியாத சொத்து. எந்த வன விலங்கும் நகரங்களில் நம் வீடு தேடி வந்து நம்மைத் தாக்குவதில்லை.
வால்பாறை போன்ற அவற்றின் வாழ்விடத்தில் நடக்கும் இச்சம்பவங்களைத் தவிர்க்க நாமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு எவ்வளவு இழப்பீட்டுத்தொகை கொடுத்தாலும் இழப்பை ஈடுசெய்ய முடியாது. எல்லோரும் விரும்புவது இனி எந்தக் குழந்தையும் தாக்கப்படக் கூடாது என்பதையே. அதை வனத்துறையால் மட்டும் செய்து விட முடியாது. அரசின் எல்லா துறைகளும் இதில் கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்களும் தங்கள் பகுதியிலிருந்து சிறுத்தைகளை முற்றிலும் அப்புறப்படுத்த முடியாது என்பதை உணர்ந்து மிகுந்த கவனத்துடன் வாழ வேண்டும்.
கட்டுரையாளர்: "ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர். 
~பசுமை உணர்வுடன் உமேஷ் ~

No comments:

Post a Comment